கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ.

05.08.2025 09:40:06

கனடாவில்  சஸ்கட்சிவான் (Saskatchewan) , மனிடோபா(Manitoba) , பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia), அல்பிரட்டா(Alberta) மற்றும் ஒன்டாரியோ ( Ontario) மாகாணங்களில் பற்றி எரிந்து வரும் காட்டு தீ காரணமாக ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக  நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப்  பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) வெளியிட்ட அறிக்கையில், புகை காரணமாக காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களுக்குள்ள ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, மற்றும் பிற சுவாச நோய்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக் கவசத்தை அணிவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  புகையின் தாக்கம் வரும்  நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் , கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.