தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பத் தீர்மானம்!

06.08.2023 10:04:41

13 ஆவது திருத்தம் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தம் சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை கோரியுள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும், அக்கட்சியின்; நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக 13 ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் பரிந்துரைகளை அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டின் போது அதிகாரப்பகிர்வு, மாகாண சபை தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடல் சுமூகமற்ற நிலையில் நிறைவுக்கு வந்துள்ள சூழலில் அதுகுறித்து விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சந்திப்பில் சம்பந்தன் மட்டும் பங்குபற்றுவதா இல்லை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதா என்பது தொடர்பாக இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பித்தக்கது.