15 வருடங்களின் பின் அரசியல் கைதியொருவர் நிரபராதி என விடுதலை

17.12.2021 09:36:50

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார் இ ந்நிலையில் 

கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

இதேவேளை அவரது மகளுக்கு ஒரு வயதும் நிரம்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு , தற்போது அவர் விடுவிக்கப்பட்டதும் , தனது மகளை 15 வருடங்களின் பின் கண்டு நெகிழ்ச்சியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.