9 பொருட்களுக்கு குறியீட்டு விலை - அரசாங்கம் தீர்மானம்
தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான குறியீட்டு விலையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா பெறுமதி அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்ற போதும், சந்தையில் அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பொருட்களின் சில்லறை விலையில் குறைவை அவதானிக்க முடியாதுள்ளமை அடையாளங் காணப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பண்டங்களை இறக்கும் போதான விலை மற்றும் சில்லறை விலை ஆகியவற்றுக்கிடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் காணப்படுகின்றது.
இந்நிலையில் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் நெறிப்படுத்தலில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பீடு செய்யப்பட்ட சந்தை விலையை ஆராய்ந்து குறித்த விலைகளை குறியீட்டு விலைகளாக வாராந்தம் பிரகடனம் செய்யும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் நுகர்வோர் குறித்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலைகள் தொடர்பில் ஆழமாக கவனமெடுத்து குறித்த உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் இயலுமை கிடைக்கும். அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் குறியீட்டு விலைகள் தொடர்பாக வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.