துபாய் சென்றார் ஸ்ரேயாஸ்

17.08.2021 08:27:59

ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்பதற்காக டில்லி அணியின் ஸ்ரேயாஸ், துபாய் சென்றார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26. இவரது தலைமையிலான டில்லி அணி, 13வது ஐ.பி.எல்., தொடரில் பைனல் வரை சென்றது. கடந்த மார்ச் மாதம் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ‘பீல்டிங்’ செய்த போது இவரது தோள்பட்டை பகுதியில் காயமடைய, ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார். இதனால், 14வது ஐ.பி.எல்., உட்பட எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை.

இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் எமிரேட்சில் துவங்குகிறது. காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட ஸ்ரேயாஸ், போட்டிகளில் பங்கேற்க தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்பதற்காக ஸ்ரேயாஸ், டில்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரவிண் ஆம்ரேவுடன் துபாய் சென்றார். வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்திக் கொண்ட பின் இவர் பயிற்சியை துவக்க உள்ளார். மற்ற டில்லி அணி வீரர்கள் இம்மாத இறுதியில் எமிரேட்ஸ் செல்ல உள்ளனர்.