ரணிலின் பெரும்பான்மைக்காக கோட்டாபய படும்பாடு!

14.05.2022 15:51:17

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடருந்து கருத்துரைத்த அவர்,

ஜனநாயக இடதுசாரி முன்னணி 10 கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த 10 கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

எமது கூட்டணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள். நாங்கள் விடயங்களையும் காரணங்களை தனித்தனியாக ஆராய்ந்து முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுப்போம். எமது ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையை தணிக்க அரசு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் பெறுமதியான நடவடிக்கையாக கருதுகிறோம். நாங்கள் அரசாங்கத்தை எதிர்க்கின்றோம் என்பதால், அந்த நடவடிக்கைகளை சீர்குலைக்க மாட்டோம்.

இதனால், நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, நாடு முழுவதும் காணப்படும் கலவரங்கள்,மிலேச்சத்தனங்கள் முடிவுக்கு வந்து, தேர்தல் ஒன்றுக்கு செல்லும் சூழலை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. இதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வரவே நாங்கள் விலகி இருந்தோம். அதற்காக நாங்கள் எடுத்த முயற்சிகள், அரசாங்கத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி காரணமாக, அமைச்சர்களாக இருந்த நாங்கள் வெளியேற்றப்படும் நிலைமையை எதிர்நோக்க நேரிட்டது. அமைச்சரவை இரண்டாக பிளவுப்படுத்தப்பட்டது. அரசாங்கத்திற்குள் இருந்த ஐக்கிய இல்லாமல் ஆக்கப்பட்டது. அரசாங்கம் நாட்டை தற்போதைய நிலைமைக்கு தள்ளியது.

இப்படியான நிலைமையில் நாங்கள் அரச தலைவரை பல முறை சந்தித்தோம். எமது 10 கட்சிகளுடன் சில நேரங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துக்கொண்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் இணக்கப்பாடுகளுக்கு வருவோருடன் இணைந்து சர்வக் கட்சி அரசாங்கம் அல்லது பல கட்சி அரசாங்கத்தை அமைத்து உரிய காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் அரச தலைவரிடம் யோசனை முன்வைத்தோம்.

இதற்கு அமைய மத்தியமான காலத்தில் தேர்தல் ஒன்றை நடத்தும் சூழலை ஏற்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது. இதற்கான வேலைத்திட்டத்தையும் நாங்கள் அரச தலைவரிடம் முன்வைத்தோம். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எனக்கு அனுப்பிய பதில் கடிதம் என்னிடம் உள்ளது. இந்த யோசனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உங்களது கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றேன். இதில் கலந்துக்கொண்டு, நீங்கள் வழங்கும் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை தேசிய தேவைக்காக மேற்கொள்ளும் மிகப் பெரிய சேவையாக இருக்கும் என்பதை நேர்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி எமது கட்சிக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருந்தார்.

இதற்கு அமைவாகவே நாங்கள் செயற்பட்டு வந்தோம். நாங்கள் சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தோம், அது முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில், முடிந்தால், நீங்கள் ஆட்சியமையுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியிடம் கூறினோம். ஐக்கிய மக்கள் சக்தி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முயற்சித்தது. சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க இணங்கி, அதில் இணைய வேண்டும் அல்லது நீங்கள் அரசாங்கத்தை அமையுங்கள் என்ற நிபந்தனையின் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தோம்.

நாட்டில் ஸ்திரத்தன்மை தொடர இடமளிக்க முடியாது என்பதால், இதனை கூறினோம். பிரதமர் பதவி விலகியதை அடுத்து அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையற்றதாகி போனது. இதனையடுத்து அரச தலைவர் எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு அமைய செயற்படாது. அவசரமாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

தற்போது ரணில் அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். எமக்கு எழுதி கடிதத்திற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச எப்படி , இப்படியான முடிவுக்கு வந்தார் என்பதை எங்களால் புரிந்துக்கொள்வது கடினமாக இருக்கின்றது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு அவரது வாக்கு மாத்திரமே நாடாளுமன்றத்தில் இருக்கின்றது. எனினும் அவர், யாருடைய ஆதரவையேனும் பெற்று பெரும்பான்மையை நிரூபித்தால், அவரது பிரதமர் பதவி உறுதியாகும். ஜனாதிபதி இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக எமக்கு தெரியவந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோர அரச தலைவர் அவர்களை அழைத்து இருக்கலாம். நாங்கள் எமது கொள்கைகக்கு நிகரான கொள்கை கொண்டுள்ளவர்களுடன் இணைந்து செயற்பட தயார். அப்படி நாங்கள் இணைந்து செயற்படும் போது நாங்கள் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அவர்களின் ஆதரவை பெற முயற்சிப்போம்.

எமது கட்சியும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், பூகோளவியல் அரசியலில் இருந்து இலங்கையை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுப்போம். தேசிய சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்க நாங்கள் முன்னுரிமையை வழங்குவோம் என்பதை கூற வேண்டும்.

புதிய தாராளமயம் மற்றும் ஏகாதிபத்தியவாத்தை நாங்கள் நிராகரிக்கின்றோம். உழைக்கும் மக்களை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறைமையின் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அது நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் நாட்டின் எதிர்காலத்திற்கான பாதையாகவும் இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தி அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்போம். எங்களுக்கு கடிதங்களை அனுப்பி, அழைப்பு விடுத்து, எவருக்கும் அறிவிக்காது ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தது குறித்து எமக்கு மிகப் பெரிய அதிருப்தி இருக்கின்றது. அரச தலைவர் பதவி விலகினால், பிரதமர் அரச தலைவராக பதவிக்கு வர முடியாது.

அரச தலைவர் ஒருவர் இல்லை என்றால், நாடாளுமன்றம் அரச தலைவரை தெரிவு செய்யும். அமைச்சரவை அமைச்சர்கள் 20 பேர் என கேள்விப்பட்டோம். ராஜாங்க அமைச்சர்கள் இதனை அதிகம் எனக் கூறப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அமைச்சு பதவிகளை வழங்குவாரா அல்லது என்ன செய்வார் என்பதை எங்களால் கூற முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் என்ன முடிவுகளை எடுக்கும் என்பது எமக்கு தெரியாது எனினும் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டோம். தற்போது இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம். தற்போது அரசாங்கத்தை எதிர்க்க மாட்டோம், அதற்கான தேவை தற்போது இல்லை. எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்போம்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமை குறித்து கவலையை விட மிகப் பெரிய அதிர்ச்சியில் இருக்கின்றேன். சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருந்தாலும் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டோம். எமக்கு அவர்கள் தொடர்பில் எதிர்ப்பு உள்ளது. அவர்கள் வலதுசாரிகள் என்பதே இதற்கு காரணம்.

இதன் காரணமாகவே சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க மகிந்த ராஜபக்சவையும் நாங்கள் விலகுமாறு கூறினோம். நாங்கள் அனைத்து கட்சிகளையும் இணைத்து, பிரதமர் ஒருவரை தெரிவு செய்து, சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தோம். இந்த முயற்சிகள் அனைத்து சீர்குலைந்து போனது", எனக் குறிப்பிட்டார்.