40 வருடங்களின் பின் மேடையேற்றம்!

03.05.2024 09:37:11

பேராசிரியர் சி.ஜெய்சங்கரின் நெறியாள்கையில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களின் சத்தியசோதனை நாடகம் கடந்த ஏப்ரல் மாதம்  25ஆம், 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் 6 தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டது. கொக்குவில் தேசிய கலை இலக்கிய பேரவையிலும், திருமறைக்கலா மன்றத்திலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரி(இரு தடவை), சுண்டிக்குளி மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் இந்நாடக ஆற்றுகை நடைபெற்றது.

1984ஆம் ஆண்டளவில் குழந்தை ம.சண்முகலிங்கத்தால் எழுதப்பட்ட இந்நாடகம் அப்போது கலாநிதி க.சிதம்பரநாதனது நெறியாள்கையில் பல அரங்குகள் கண்டிருந்தது. 40 வருடங்கள் கழித்து இந்நாடகம் மீண்டும் மேடையேற்றப்பட்டுள்ளமை முக்கியமானதாகும். இந்த நாடகம் நடைமுறைக் கல்வி தொடர்பான விமர்சனங்களை முன்வைத்து கேள்வி எழுப்புவதுடன் பொருத்தமான கல்விமுறையின் இன்றியமையாமை தொடர்பில் சிந்தனைத் தூண்டலை ஏற்படுத்துவதாக ஆக்கப்பட்டுள்ளது.

 

40 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கல்வி தொடர்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டனவோ அவையெல்லாம் இன்றும் பேசப்படுகின்ற, மேலும் மோசமாகச் சீரழிந்திருக்கிற நிலையை இந்த நாடகத்தைப் பார்ப்பவர்கள் உணரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒருவரே கல்வியில் உயர்நிலையை அடைய முடியும். போட்டி போட்டுப் படிக்கின்ற நிலையை, அந்தப் போட்டியில் சிலர் வெல்ல ஏனையவர்கள் வெளிவீசப்படுகின்ற நிலையைஇ படித்த படிப்புக்கும் கிடைக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாத நிலையை இந்நாடகம் பேசுகிறது. பாடசாலைப் படிப்புக்கு மேலாக ரியூசன் என்று பிள்ளைகளை வருத்துகின்ற, அவர்களில் அதிக சுமையை ஏற்றுகின்ற கல்விமுறையை, எமது மக்களின் மனப்பாங்கையெல்லாம் இந்நாடகம் கேள்விக்கு உட்படுத்துகின்றது. இவையெல்லாம் அச்சொட்டாக இன்றும் பொருந்துகிறது. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் தீர்க்கதரிசனமான சிந்தனையை இந்நாடகம் இன்றளவும் கடத்தி வந்துள்ளது என இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நாடகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவிகளே முழுமையாக நடித்திருந்தனர். சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாக முன்வைத்திருந்தார்கள். அத்துடன் வழக்கமான இசைக்கருவிகளின் பயன்பாடு இல்லாமல் தடி, சப்பளாக்கட்டை, கிறிச்சான் முதலான எளிமையான கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆற்றுகையை அவர்கள் செய்திருந்தமை சிறப்பானது. தேசிய கலை இலக்கியப் பேரவையில் நாற்சார் முற்றத்திலேயே ஆற்றுகை இடம்பெற்றது. சூழலுக்கேற்ப செயற்படக்கூடிய வகையில் தாமே பாடி ஆடி நடித்தமையும் சிறப்பானது.

இலங்கை அரசாங்கம் கல்வியில் புதிய சீர்திருத்தம் ஒன்றினை நடைமுறைப்படுத்த முனையும் இச்சந்தர்ப்பத்தில் இந்நாடகமும் கல்வியில் மாற்றந் தேவை என வலியுறுத்துவது முக்கிமானது. பேராசிரியர் சி.ஜெய்சங்கர் சமூக மாற்றந் தொடர்பிலும், சூழலியல் தொடர்பிலும், பாரம்பரிய கலைகளின் மீளுருவாக்கம் தொடர்பிலும் தொடர்ந்து குரல் கொடுத்தும் செயலாற்றியும் வரும் ஒருவர். அவரது நெறியாள்கையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவியர் 40 வருடங்கள் கடந்த ஒரு நாடகத்தை மீண்டும் மேடையேற்றியிருப்பதும், ஒரு சிந்தனைக் கிளறலைச் செய்திருப்பதும் முக்கியமானது.