சர்வாதிகார, அராஜக ஆட்சியின் உச்சகட்டம்!
|
அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தம்மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இல்லை. சர்வாதிகார, அராஜக ஆட்சியின் உச்சகட்டமாக மகா சங்கத்தினர் அமைச்சர்களால் விமர்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். |
|
கண்டியில் செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்தலை தேரர் மீது அரசியல் நோக்கத்திலான விமர்சனங்கள் ஆளுந்தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தம்மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இல்லை. எனவே தான் தம்மை விமர்சிப்பவர்களை பழிவாங்ககும் எண்ணம் கொண்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மகா சங்கத்தினர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அதனை அவர்கள் உடனடியாக மீளப் பெற வேண்டும். அது மாத்திரமின்றி அவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும். அரசாங்கம் விமர்சனங்களுக்கு எந்தளவுக்கு அச்சப்படுகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மதத் தலைவர்கள் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் இவ்வாறான விமர்சனங்கள் தொடர்பில் மகா சங்கத் தேரர்கள் அவதானம் செலுத்தி, அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தின் தன்னிச்சையான அராஜக ஆட்சி தொடரும் அபாயமே காணப்படுகிறது. ஜே.வி.பி.யினர் இன்னும் தம்மை எதிர்க்கட்சியினர் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மகா சங்கத்தினர் மீது மாத்திரமின்றி வேறு எந்தவொரு மதத் தலைவர் மீது அவதூறு பரப்புவதையும், அவர்களை விமர்சிப்பதையும் அனுமதிக்க முடியாது. அரசியல் என்பது விமர்சனங்கள் நிறைந்ததாகும். எனவே அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு அனைவரும் பழக்கப்பட வேண்டும். அரசாங்கம் செய்வது மாத்திரமே சரி என்றும், ஏனையோர் செய்பவை அனைத்தும் தவறு என்றும் கூறினால் அது சர்வாதிகாரமாகும் என்றார். |