சர்வதேச பங்கேற்புடன் சுயாதீன குற்றவியல் நீதிப்பொறிமுறை அவசியம்!
|
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசத்தின் பங்கேற்புடன் கூடிய சுயாதீன குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்று அவசியம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சனி யோகராசா தெரிவித்தார். |
|
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமையுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். “வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப் போராடி வரும் ஒவ்வொரு தாயும் உயிரிழக்கும்போதும், எதிர்கால நீதிக்கான ஒரு சாட்சியம் அழிகிறது. எனவே, இந்த சாட்சியங்கள் தற்போதே முறையாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் வெறுமனே ஒரு தொழில்சார் பணியாக இருக்கக்கூடாது. மாறாக, அவை நீதியை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். இன்றைய சர்வதேச மாநாட்டின் ஊடாக ‘எங்களுடைய உறவுகள் எங்கே?’ என்ற முக்கியமான செய்தியை சர்வதேச சமூகத்தை நோக்கி அனுப்பி வைக்கின்றோம்” என்றார். |