மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை உறுதி.

26.05.2026 09:01:42

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

 

இலங்கை பொலிஸ் பாவனைக்கு தேவையான 134 கெப் ரக வாகனங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் திங்கட்கிழமை (25) ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 2025 இல் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்ததையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

குறிப்பாக, இரு தரப்பினரும் மிக நெருக்கமாகவும், கூட்டுப் பொறுப்புடனும் செயற்பட்டதன் விளைவாக, ஆரம்பத்தில் 80 வாகனங்களை வழங்குவதற்குத் தீர்மானித்திருந்த போதிலும், தற்போது அதனை 134 வாகனங்களாக அதிகரித்து வழங்க முடிந்துள்ளமை எமது சிறந்த ஒத்துழைப்பிற்குச் சான்றாகும்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் வெறும் அரசியல் ரீதியானவை மட்டுமல்ல, அவை வரலாற்று ரீதியான மக்கள் பிணைப்பைக் கொண்டவை.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன.

அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன. அரசாங்கங்கள் என்ற ரீதியில் மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் முன்னெடுக்கும் தூய்மையான நிர்வாகம் மற்றும் நாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான இந்த உதவிகளை வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இந்த கெப் ரக வாகனங்கள் உள்ளூர் மட்டத்திலும், சமூக மட்டத்திலும் காவல் சேவையை வலுப்படுத்த உதவும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால நட்புறவும், மக்களின் பிணைப்பும் எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு என்றார்.