பிரதமருக்கும், மத்திய அமைச்சருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
|
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “மேற்கு ஆசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால், மிகவும் தொழில்மயமான தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய, இது தொடர்பான துறையினருக்கு உத்தரவிட வேண்டும். |
|
வளைகுடா நாடுகளில் 19 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவி எண்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதுவரை உதவி கோரி 2 ஆயிரத்து 600 அழைப்புகள் வந்துள்ளன. பெரும்பாலானோர் தாயகம் திரும்புவதற்கான விமான ஏற்பாடுகளைக் கோரியுள்ளனர். அதில் ஆயிரம் பேரின் தகவல்களைச் சேகரித்து ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ளோம். பலர் அருகில் உள்ள வேறு நாடுகளில் இருந்து இந்தியா வர வேண்டியுள்ளதால் அவர்களுக்கான விசா உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 593 மீனவர்களும் இரான் நாட்டில் சிக்கியுள்ளனர். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உலகளவில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக 'அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995' அமல்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்கும் அதேவேளையில், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65% என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க வேண்டுகிறேன். குளிர்காலங்களில் குறைந்த அளவில்தான் இந்த மின்நிலையங்கள் எரிவாயுவைப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், எதிர்வரும் கோடைக்காலத்தில் மின் நுகர்வு உச்சத்தை எட்டும் என்பதால் அவர்களுக்கான எரிவாயு தேவை கூடும். மேலும், இப்போது வரை எரிவாயுவைப் பன்படுத்தி வந்த உணவகங்கள் உள்ளிட்ட நுகர்வோரும் தற்போதுள்ள தட்டுப்பாட்டினால் இனி மின்சாரத்தை நாடுவார்கள் என்பதால் மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, 'கடந்த 6 மாதப் பயன்பாட்டில் 65%' என்பதை மாற்றி, கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் பயன்படுத்திய அளவில் 65% என எரிவாயு விநியோக அளவை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்காசியப் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நம் மக்களைப் பாதிக்கும் அவசரப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி க்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், வணிகம் மற்றும் தொழில்முறை நுகர்வோருக்குத் தடையின்றி எல்.பி.ஜி. விநியோகத்தை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். மேற்காசியாவில் தவித்துக் கொண்டிருக்கும் நபர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான டிரான்சிட் விசா, ஒருங்கிணைந்த வெளியேற்ற நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் விமான சேவைகளை அவசரமாக ஏற்பாடு செய்யக் கோரியுள்ளேன். அதோடு, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கும் கடிதம் எழுதியுள்ளேன் அதில் வரவிருக்கும் கோடைகால உச்சகட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 'இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) ஆணை 2026'-ன் கீழ் உள்ள நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கேட்டுக்கொண்டுள்ளேன். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதங்களைச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் நேரில் ஒப்படைப்பார்கள். இந்திய அரசிடமிருந்து விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். |