பொதுக்கட்டமைப்பை உடைக்க ரணில் முயற்சி!

25.08.2024 09:40:07

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக்கட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய இரண்டைத் தவிர ஏனைய தரப்பினுருக்குக் கடிதம் கிடைக்கப்பெறவில்லை எனவும், ஆகவே இச்சந்திப்புக்கு செல்வது குறித்து எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் தமிழ் பொதுக் கட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    

 

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து உருவாக்கிய தமிழ் பொதுக் கட்டமைப்பினால் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தமிழ் பொதுக் கட்டமைப்பினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த போதிலும், அவர்கள் அப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருக்கவில்லை. இருப்பினும் மரியாதையின் நிமித்தம் தாம் இச்சந்திப்பில் பங்கேற்பதாகக் கூறி தமிழ் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் துளசி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறும், அதனை முன்னிறுத்தி தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கடிதமொன்றின் ஊடாக தமிழ் பொதுக்கட்டமைப்பினருக்கு மீண்டும் அழைப்புவிடுத்திருக்கிறார்.

'தமிழ் பொதுக் கட்டமைப்பினரின் உறுப்பினர்களே' என்று விழித்து எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தில், ''எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் எனது வெற்றிக்கு தமிழ் பொதுக்கட்டமைப்பினரின் ஆதரவைக்கோர விரும்புவதுடன், அவ்வாறு ஆதரவளிப்பதை முன்னிறுத்தி தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் என்னவென்பது பற்றிக் கலந்துரையாடுவதற்கும் உங்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கடிதம் தனக்குக் கிடைக்கப்பெற்றதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியிருந்தார். இருப்பினும் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான திகதி எதுவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்படாத நிலையில், திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதுகுறித்துத் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய இரண்டைத் தவிர தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கோ அல்லது சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கோ ஜனாதிபதியின் கடிதம் கிடைக்கப்பெறவில்லை என அக்கட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதனையொத்த கருத்தை வெளிப்படுத்திய மேலும் இரு பிரதிநிதிகள், ஜனாதிபதியிடமிருந்து தமக்கு இன்னமும் கடிதம் கிடைக்கப்பெறாத நிலையில், இச்சந்திப்புக்குச் செல்வதா, இல்லையா எனத் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்றனர்.