"தேர்தலிலும் போட்டி இல்லை"

12.01.2025 11:55:55

லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பை நாடப் போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தமது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளார். அத்துடன் மறுதேர்தலிலும் போட்டி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த தேர்தல் வரும் வரையில் தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரவே விரும்புவதாக சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

லிபரல் கட்சியில் தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக வரவேற்றதற்கும், முக்கிய அமைச்சரவை இலாகாக்களை தனக்கு வழங்கியதற்கும் பிரதமர் ட்ரூடோவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் ட்ரூடோ தனது அடுத்த அத்தியாயத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளதால், அதையே தாமும் முன்னெடுக்க இதுவே சரியான நேரம் என்று தான் தீர்மானித்துள்ளதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதனால், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் பொதுக் கொள்கை பகுப்பாய்வுகள் என தனது முந்தைய தொழில்முறை வாழ்க்கைக்குத் திரும்ப இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பதிலாக வரவிருக்கும் போட்டியில் இருந்து விலகிய சமீபத்திய பெடரல் கேபினட் அமைச்சர் ஆனந்த் ஆவார். ராஜினாமா செய்ய அதிகரித்து வரும் அழுத்தங்களைத் தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.

ஏற்கனவே, வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, நிதியமைச்சர் Dominic LeBlanc ஆகியோரும் தலைவர் போட்டியில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.