ஈரானிய ஜனாதிபதி இப்ரஹிம் ரெய்ஸி இலங்கை வருகை;

23.04.2024 00:43:10

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதன்கிழமை  (24) பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார்.

ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும்.

 உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் அதனைத்தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத்தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது.

 இத்திட்டத்தின்கீழ் புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது. அங்கிருந்து 15.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது. இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  

அதன்படி இத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காக இலங்கைக்கு வருகைதரவிருக்கும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு உமா ஓயா திட்டத்தைத் திறந்துவைத்தன் பின்னர், அன்றைய தினமே அவர் நாட்டிலிருந்து புறப்படுவார் எனவும் அறியமுடிகின்றது. 

அதேவேளை ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அமெரிக்கத்தூதரகம் அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.