பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து.

15.10.2025 14:19:06

பங்களாதேஷில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

16 உடல்கள் மீட்கப்பட்டாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி தொழிற்சாலைக்கு வெளியே செவ்வாய்க்கிழமை (14) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நண்பகல் சுமார் 12 மணிக்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அணைக்கப்பட்டது. 

ஆனால் அருகிலுள்ள இரசாயனக் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் தொகை அதிகம் உள்ள பங்களாதேஷில் பெரிய அளவிலான தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கமானது.

இதற்குக் காரணம் பாதுகாப்புத் தரங்கள் குறைவாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவும் இருப்பதுதான்.