பாரிய அரசியல் போராட்டத்திற்கு தயாராகும் எதிர்க்கட்சி!
|
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக, பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை (23) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. |
|
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி நாளை செவ்வாய்க்கிழமை (21) நடைபெறவுள்ள பாராளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து தீர்ர்மானிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதிநிதித்துவப்படுத்தாத சகல எதிர்க்கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும் அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இக்கூட்டத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுக்கும் நோக்கில், கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தனித்தனியாகத் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராகக் கூட்டுப் போராட்டமொன்றை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |