யுக்ரைனின் இரு பகுதிகளை சுதந்திர குடியரசுகளாக அங்கீகரித்தார் ரஷ்ய ஜனாதிபதி!
யுக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள இரண்டு பகுதிகளைச் சுதந்திர குடியரசுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அறிவித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை அதிகரித்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் உக்ரைன் பாதுகாப்பு தரப்பினருடன் ரஷ்ய ஆதரவிலான கிளர்ச்சியாளர்கள் மோதி வரும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளே இவ்வாறு சுதந்திர குடியரசுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த செயற்பாடானது, பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது.
இந்தநிலையில் யுக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய இராணுவத்தினர் நுழைவதற்கு இது வழிவகுக்கும் என மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யுக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைப்பேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகி சிறிது நேரத்தில் அங்கு அமைதிகாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் துருப்புக்களுக்கான உத்தரவில் ஜோ பைடன் கைச்சாத்திட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த உத்தரவுக்கு அமைய அமெரிக்க துருப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த பின்னணியில் அமெரிக்க துருப்பினர் எல்லை தாண்டினால் ரஷ்யாவின் ஆதரவிலான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அதிகாரப்பூர்வமாக நுழைவது இதுவே முதல்முறையாகும்.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பானது சர்வதேச சட்டத்தை மீறும் செயற்பாடு எனப் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனின் இறையாண்மையை மீறும் செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் மோசமான அறிகுறி எனவும் பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் இன்று அறிவிக்கப்படும் எனப் பிரித்தானிய வெளி விவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரித்தானிய மேலதிக ஆயுதங்களை யுக்ரைனுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கனடாவும் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டத்திற்கு யுக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.