திருச்சி கிழக்கில் போட்டியிடும் திட்டம் இருக்கா?!.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக மாறினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு வரவேற்பு கிடைக்காது, விஜய் கட்சி துவங்கி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது, அவர் சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் எப்படியும் நாம் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக நம்பியது. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என முக ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது..
அதோடு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சியின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறது. அந்த கட்சிகளில் கம்யூனிஸ்ட்டை தவிர மற்ற கட்சிகளுக்கு தவெக அமைச்சரவையிலும் இடம் கொடுத்திருக்கிறது.
ஒருபக்கம் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தது திமுகவினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் விஜய் ‘அப்பாவை காணோம்’ என கிண்டலடித்தது திமுகவினரை கொதிப்படைய செய்திருக்கிறது. எனவே திருச்சி கிழக்குக் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு மீண்டும் சட்டசபைக்கு வரவேண்டும் என ஸ்டாலினிடம் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்..
அதோடு, திமுக கூட்டத்தில் பேசிய கே.என் நேரு தலைவர் கண்டிப்பாக விரைவில் சட்டசபைக்கு வருவார் என சூசகமாக கூறியிருந்தார். இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவார் என பலரும் நினைத்தனர். இந்நிலையில், இன்று அறிவாலயத்தில் செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் ’திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறீர்களா?’ என கேள்வி கேட்டதற்கு ‘நான் இன்னும் அதுபற்றி முடிவு செய்யவில்லை’ என பதிலளித்திருக்கிறார்.