இந்தி மொழிக்கு எதிராக வலுவடைந்த போராட்டம்.

30.06.2025 07:55:54

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசு அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம், வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தது மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தேசிய கல்விக் கொள்கை மூலம் மகாராஷ்டிராவில் இந்தியை மொழி திணிப்பதாகக் கூறி அந்த நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தில் பெரும் சர்ச்சையானதால், மகாராஷ்டிராவில் மராத்தி கட்டாயமாகவே உள்ளது என்றும், இந்தி மொழி திணிக்கப்படவில்லை என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென பல்டி அடித்தார். அதனை தொடர்ந்து, பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கண்டிப்பாக இந்தி மொழி இருக்கும் என்ற முடிவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றது.

அதனை தொடர்ந்து, 1ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக இருப்பதற்கு பதிலாக விருப்பமான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் படிக்க விருப்பம் தெரிவித்தால் அவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மாநில அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்தி மொழியை ஆதரிக்கும் தேசிய கல்வி கொள்கையில் இருந்து முதலில் பின்வாங்கிவிட்டு, அதன் பின்னர் அதே இந்தி மொழியை மறைமுகமாக மாணவர்களுக்கு திணிப்பதாக கூறி மராத்தி அமைப்புகள் உள்பட எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

மாநில அரசின் இந்த முடிவுக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே சிவசேனா அணித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வரும் ஜூலை 7ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் அறிவித்தனர். சிவசேனா கட்சியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நவநிர்மாண் சேனா கட்சியை ஆரம்பித்த உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகனான ராஜ் தாக்கரே, இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்திருந்தது அம்மாநில அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது.