’அடையாளத்தோடு வாழ விரும்புகிறோம்’
நாங்களும் நீங்களும் தேசத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டுபட்ட தேசங்களுக்குறிய இரண்டுபட்ட இனக்குழுமங்கள் என்ற அடையாளத்துடன் வாழ்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து வரலாற்று சிந்தனைகளை கைவிட்டு 21 ஆம் நூற்றாண்டிற்குரிய நவீன சிந்தனையின் படி இனப்பிரச்சினையை அணுக வேண்டும். சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசு தயாராக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் பல விஷயங்களை சொல்லியிருந்தாலும் 80 வருடங்களாக இந்த மண்ணில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் அவர் ஒரு வார்த்தை கூட பேசாது விட்டது,அவரின் உரையில் தமிழ் மக்களுக்கான தீர்வு முயற்சி என்பது மிக முக்கியமான விடயம் என்பது பேசப்படாமல் போனது துரதிர்ஷ்டமானது.
இதே பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ச தனது கொள்கைப் பிரகடன உரையிலும் அதற்கு பின்னர் அவர் இந்தியா சென்றபோது இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும் இந்த நாட்டில் உள்ள பிரச்சினை தொடர்பில்,தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு வார்த்தைகளையும் பேசாது தவிர்த்து சென்றிருந்தார். அந்த தவிர்ப்பு என்பது இந்த நாட்டில் அவரை அடையாளம் தெரியாமல் ஆக்கி வைத்துள்ளது என்ற வரலாற்றை நீங்கள் ஒரு முறை திரும்பிப்பார்க்க வேண்டும் .
இன்று உங்களிடம் 159 ஆசனங்கள் என்ற பெரும்பான்மை பலம் உள்ள சக்தியாக நீங்கள் உருவெடுத்து உள்ளீர்கள் .அதை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் இரத்தமும் சதையுமாக கண்ணீரோடு வாழ்ந்த இனம். சிங்கள சகோதரர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட யுத்தத்தினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட இனம். இன்றும் விடுவிக்கப்படாத காணிகள்,ஆகாது முகாம்கள்,எங்களின் வாழ்க்கை முறையில் எல்லாம் நாங்கள் தத்தளித்தோம் கொண்டிருக்கின்ற இனமாக உள்ளோம்.இந்த நிலையில் கூட உங்களோடு எமது கரங்களை சேர்த்து பயணிக்க விரும்புகின்றோம்.உங்களின் பலமான மாற்றங்களோடு தமிழ் மக்கள் தமது மாற்றங்களை நோக்கி நகரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாங்கள் எதற்கும் எதிராளிகள் அல்ல. நாங்கள் பல் காலங்களில் பல் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். ஆனால் பேச்சுக்கள், உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன .எழுதப்பட்டுள்ள ஒப்பந்த கள் எல்லாம் ஒன்றில் கிழித்தெறிய பட்டுள்ளன.அல்லது அவர் 13 ஆவது திருத்தத்தைப் போல் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன.
இன்று மாற்றம் வந்துள்ளது .எதையும் செய்யக்கூடிய வல்லமையுடன் வந்துள்ளீர்கள். நாங்கள் நீண்ட காலமாக போராடி கிட்டத்தட்ட 4 இலட்சம் தமிழ் மக்கள் இறந்தார்கள் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் இந்த மண்ணில் விதைக்கப்பட்டு உள்ளார்கள். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் இழந்தும் நம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கின்ற இனம் உங்களோடு கைகோர்க்கத் தயார் என்று இன்றும் எங்களுடைய சமாதானக் கதவுகளைத் திறந்து உங்களுடன் நாங்கள் பேசுகிறோம். காரணம் இந்த நாட்டில் நீங்கள் நீங்களாகவும் நாங்கள் நாங்களாகவும் எங்களின் உரித்துக்களோடு வாழவேண்டும் என்ற உன்னதமான எண்ணங்களோடு உயர்ந்த குணங்களோடும் உங்களோடு கரம் கோர்க்க நாங்கள் தயார்.
சிங்கள மக்களின் தேசிய அடையாளங்கள் ,உங்களின் இன ,மத கலாசார அடையாளங்களை ,நில. மொழி அடையாளங்களை நாம் மதிக்கிறோம். இது ஒரு இனத்துக்குரியது. அதேபோல் இந்த மண்ணில் 21 ஆம் நூற்றாண்டின் காலத்திற்கு நீங்கள் வருவதென்றால் இப்போதுள்ள காலச்சூழலில் எவ்வாறான விடயங்களை கையாள வேண்டும்.எவ்வாறு அரசியல் மாற்றங்களை நோக்கி நகர வேண்டும் எனப்தில் உங்களின் கரிசனையை ,எண்ணங்களை நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்களுடன் பேசுவதற்கு சிங்கள மக்களின் எண்ணங்களோடு சேர்ந்து செல்வதற்கும் இந்த நாட்டில் நாங்களும் எங்களுக்குரிய மொழி,பண்பாடு,எங்களுக்குரிய நில அடையாளம்,பூர்வீக குடிகளான நாம் இந்த தேசத்தில் உங்களின் இனக்குழுமமாக சேர்ந்து வாழ நாங்களும் நீங்களும் தேசத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டுபட்ட தேசங்களுக்குறிய இரண்டுபட்ட இனக்குழுமங்கள் என்ற அடையாளத்துடன் வாழ்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம் .
நாட்டில் சமாதானம்,சமத்துவம்,சம உரிமை உண்மையானது.நாங்கள் யாரும் நிராகரிக்கவில்லை. ஆனால் ஓர் இன அடையாளம் ,ஓர் இனத்தினுடைய உரிமை ,அந்த இனத்தினுடைய இருப்பு என்பது வித்தியாசமானது .அதை நாம் சம உரிமையாக சொல்ல முடியாது .சம உரிமை உள்ளது ஆனால் இனத்தின் அடையாளத்தை விற்ற சமஉரிமையல்ல. ஒரே நாடு, ஒரே மொழி ,ஒரே தேசம் என்பது ஒரு இனத்துக்குரியதாக அமைய முடியாது . இது பல் தேசிய இனங்கள் வாழ்கின்ற நாடு .இங்கு நீண்டகாலமாக இனக்குழும ரீதியாக போராடி வருகின்ற எங்களுடைய எண்ணங்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
சமரசம் என்பது நாங்களும் நீங்களும் கை குலுக்கி கொள்வதல்ல . நாங்கள் இன தனித்துவங்களை அதாவது பேசப்படும் சமரசங்கள் இன தனித்துவங்களை இழந்ததாக இருக்க முடியாது. ஆகவே தமிழ் தேசிய இனத்தின் தனித்துவங்களை நீங்கள் மதித்து நட பதில்தான் உங்களுக்கும் எங்களுக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் கைகூடிவரும்.
நாம் வரலாற்று ரீதியாக பல நெருக்கடிகளை சந்தித்தவர்கள். குறிப்பாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து வரலாற்று சிந்தனைகளை கைவிட்டு 21 ஆம் நூற்றாண்டிற்குரிய நவீன சிந்தனையின்படி இனப்பிரச்சினையை அணுக வேண்டும். சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசு தயாராக வேண்டும் என்றார்.