டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை
பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று கூறினார்.
கட்டார் தலைநகர் தோஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், பிரிக்ஸ் நாணயத்தை வைத்திருக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என்றும், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்த பங்காளியாகும்.
இந்த விவகாரத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது வேறு எந்த நாணயத்தையும் திரும்பப் பெறவோ மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகளிடம் உறுதிமொழி கோரி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக தளத்தில் பதிவிட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் ஜெய்சங்கரின் இந்த பதில் வந்துள்ளது.
ஜனவரி 2025 இல் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பத் தயாராக உள்ள குடியரசுக் கட்சித் தலைவர், அமெரிக்க டொலரில் இருந்து விலகிச் செல்லும் திட்டங்களைத் தொடர்ந்தால், பிரிக்ஸ் நாடுகள் 100 சதவீத வரிக் கட்டணங்களை எதிர்கொள்வார்கள் என்றும் எச்சரித்திருந்தார்.
கடந்த மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, அதன் உறுப்பு நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தன.
பிரிக்ஸ் குழுவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.