22வது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

18.08.2026 14:58:56

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

   

முதலாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதற்கு அமைய, இந்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளதா என்பதை சவாலுக்கு உட்படுத்த எவராவது விரும்பினால், இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும்.

அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் குறித்த விடயத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தி 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அத்துடன், நீதித்துறை (திருத்த) சட்டமூலம் (1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைசட் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்) முதலாவது மதிப்பீட்டுக்காக இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் ஊடாக மேல் நீதிமன்ற, மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட ஏனைய அனைத்து நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.