லிட்டில்ஜோன் இலங்கை செல்கிறார்!
சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் விஞ்ஞான விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் ஓகஸ்ட் 17 முதல் ஓகஸ்ட் 31 வரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பயணத்தின் போது அவர் இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கும் செல்லவுள்ளார்.
“அவரது பயணத்தின் போது, இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு, காலநிலை நெருக்கடி, காடழிப்பு, இயற்கைக்கு எதிரான குற்றங்கள், சிவில் மற்றும் வணிக நடவடிக்கைகள், விஞ்ஞானம்,தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்குவித்தல் மற்றும் நிலையான கடல்சார் பொருளாதாரம் குறித்து அவர் கலந்துரையாடுவார் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 19 முதல் 21 வரை இலங்கையில் அவர் அரசு அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களை சந்திப்பதுடன், அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களைப் பார்வையிடுதல் ஹைட்ரோகிராஃபி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கையர்களை இணைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வார் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.