உள்நாட்டு வீரர்களுக்கு நிதியுதவி
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 % கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நான் மகிழ்ச்சியுடன் இந்த அறிவிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
டொமஸ்டிக் கிரிக்கெட் வீரர்களுக்கான மேட்ச் ஃபீஸ் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2019-20-ம் ஆண்டு சீசனில் உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு கூடுதலாக 50 % இழப்பீடாக 2020-21-ம் ஆண்டு சீசனில் வழங்கப்படும்.
வரும் சீசனுக்கும் வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு இழப்பீடு வழங்குதல், போட்டி ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் ஆகிய பரிந்துரைகளை பிசிசிஐ அமைத்த உயர்மட்டக் குழு வழங்கியது. இந்தப் பரிந்துரை மூலம் ஏறக்குறைய 2 ஆயிரம் வீரர்கள் பயன்பெறுவார்கள். இதன்படி, 40 ரஞ்சிப் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர்களுக்கு இரு மடங்காக ரூ.60 ஆயிரமும், முதல் தரப் போட்டியில் ரூ.2.50 லட்சமும் வழங்கப்படும். ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் முதல்தர ப்ளேயிங் லெவன் வீரர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.35 ஆயிரமும், முஸ்தாக் அலி கோப்பையில் விளையாடும் வீரர்களுக்குப் போட்டி ஒன்றுக்கு ரூ.17,500 வழங்கப்படும்.
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதியம் போட்டி ஒன்றுக்கு ரூ.12,500லிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 21 போட்டிகள் முதல் 40 போட்டிகள் வரை விளையாடிய வீரர்களுக்கு ஊதியமாக ரூ.50 ஆயிரம், ஊதிய உயர்வாக போட்டி நடக்கும் நாளில் ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும். 23 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.25 ஆயிரமும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாள்தோறும் ஊதியமாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடக் கூடிய திறன் படைத்த வீரர்களை அடையாளம் காண உதவுவது டொமஸ்டிக் கிரிக்கெட் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.