பாஜக கூட்டணிக்கு போகாமல் விஜயை தடுத்தது அவரா?

23.01.2026 14:07:58

நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தார். அதுவும் ஈரோடு பொதுக்கூட்டத்தில் திமுக ஒரு தீய சக்தி என ஆவேசமாக பேசினார். அதேநேரம் பாஜக பற்றிய விஜய் அதிகமாக பேசுவதில்லை. பாஜக தனது கொள்கை எதிரி என்று மட்டும் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தபின் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நான் விஜயை சந்தித்தபோது நீங்கள் ஏன் பாஜக பற்றி பேசுவதில்லை என்று கேட்டேன்.. அதற்கு ‘தேவைப்படும் நேரத்தில் பேசுவோம்.. இப்போது திமுகதானே ஆட்சியில் இருக்கிறது என சொன்னார். எனவே அவர்களை பேசுகிறோம்’ என்று சொன்னார்.

ஒருபக்கம் திமுகவை தோற்கடிக்க விஜயின் ஆதரவு இருந்தால் சரியாக இருக்கும் என கணக்கு போட்டு அதிமுக - பாஜக கூட்டணி தங்களின் கூட்டணிக்குள் விஜயை கொண்டு வர முயற்சி செய்தது. துணை முதல்வர் பதவி உள்ளிட்ட சலுகைளை கொடுப்பதாக சொல்லியும் விஜய் அதை ஏற்கவில்லை என்கிறார்கள். இந்த கோபத்தில்தான் ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் தடுத்ததாகவும், தற்போது சிபிஐ விசாரணையை திவிரப்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

தவெகவில் முக்கிய நபராக இருப்பவர் ஜான் ஆரோக்கியசாமி. தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளர். விஜய்க்கு வலதுகரம் போல செயல்பட்டு வருபவர். அவர் என்ன சொல்கிறாரோ அதை விஜய் அப்படியே கேட்பதாக சொல்லப்படுகிறது. விஜயின் பிரச்சார பயணத்தை கரூருக்கு மாற்றியதில் ஜான் ஆரோக்கியசாமியின் பங்கு முக்கியமானது என்கிறார்கள். அதோடு பாஜக- தவெக கூட்டணி அமையாமல் தடுத்ததும் ஜான்தான் என டெல்லி மேலிடம் நம்புகிறது. எனவே விரைவில் சிபிஐ விசாரணைக்கு ஜான் ஆரோக்கியசாமி அழைக்கப்படலாம் என்கிறார்கள்.