20 கிமீ உயரத்துக்கு பறந்தது சாம்பல் பசிபிக் கடலில் எரிமலை வெடிப்பு

16.01.2022 05:54:16

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று  டொங்கா. தனி நாடாக உள்ள இதன் மொத்த மக்கள்தொகையே ஒரு லட்சத்து 6 ஆயிரம் மட்டும்தான். இதன் நிலப் பகுதியிலும், கடலிலும் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றின் பெயர், ‘டொங்கா ஹுங்கா ஹாபைய்’. மிகவும் பிரமாண்டமான எரிமலையான இதன் பெரும்பகுதி, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் இருக்கிறது. இது செயலற்ற நிலையில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், கடலில் 5 கிமீ சுற்றளவுக்கு சாம்பல் வெளியானது. இதன் சாம்பல் வானத்தில் 20 கிமீ உயரத்துக்கு பிரமாண்டமாக பறந்ததாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. எரிமலை வெடித்ததால்,  கடலில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. அவை கரைகளை தாண்டி டொங்கா நகரத்துக்குள் நுழையும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பெரியளவில் சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக டொங்கா மட்டுமின்றி,  நியூசிலாந்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தீவுகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.