தனுசின் 'பொல்லாதவன்' 2-ம் பாகம் வரவேண்டும்

10.11.2022 08:07:18

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ்-ரம்யா ஜோடியாக நடித்த பொல்லாதவன் படம் 2007-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு பிறகு மீண்டும் தனுஷ், வெற்றி மாறன் கூட்டணியில் வந்த ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களும் வரவேற்பை பெற்றன. ஆடுகளம், அசுரன் படங்களில் தனுசுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. இந்தநிலையில் பொல்லாதவன் படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதை சென்னையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதில் தனுஷ், ரம்யா, வெற்றி மாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்களை ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ''பொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டுகள். தனுசுக்கு நன்றி. அவர்தான் இந்த படத்தில் நடிக்க என்னை பரிந்துரை செய்தார். வெற்றிமாறனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. பொல்லாதவன் 2-ம் பாகம் படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.