
இங்கிலாந்து சென்றடைந்தார் டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார்.
அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதி லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
அங்கு அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது, அவரை இங்கிலாந்தின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புதன்கிழமை (17) லண்டனுக்கு அருகிலுள்ள வின்ட்சர் கோட்டைக்கு ஜனாதிபதி ட்ரம்ப்பையும், முதல் பெண்மணியையும் வரவேற்பார்கள்.
அங்கு அவர்கள் விருந்துபசாரத்தில் பங்கெடுப்பார்கள்.
அநேரம், வியாழக்கிழமை (18) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ட்ரம்பை அவரது அதிகாரப்பூர்வ நாட்டு இல்லமான செக்கர்ஸில் சந்திப்பார்.
இதன்போது, உக்ரேன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியா – சீனா மீதான வரிகளை உயர்த்துவதில் ஜி7 நாடுகளும் நேட்டோ உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் இதன்போது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.