அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வலியுறுத்திய இந்தியா!

09.09.2025 08:36:34

நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் இலங்கையை வலியுறுத்திய இந்தியா, சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கருத்துரைத்த இந்தியப் பிரதிநிதி,

2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவதற்கும், மக்களை மீள்குடியமர்த்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்ததாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று 2022 ஆம் ஆண்டு இலங்கை மிகத்தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், 2024 இல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டமையும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையும் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு நல்லுறவைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்திவருவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டார்.