ரணில் தோல்வியடைந்தமைக்கு சுமந்திரன் வருந்துகிறாரா?
நல்லாட்சி அரசில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய அரசியலமைப்பு வந்தவுடன் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவேன். புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிடில் தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து போய்விடுவேன் என்று நல்லாட்சிக் காலத்தில் கூறிய சுமந்திரன் சொன்ன சொல்லை இதுவரை காப்பாற்றவில்லை. இப்போதும் அந்தக் கதிரைக்காகவே ரணில் மீது பரிதாபம் காட்டுகிறார்போல் தெரிகிறது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டவாறு இவ்வருட பிற்பகுதியில் நடைபெறுமென்று நம்புவதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலே இவ்வருடத்தில் முதலில் இடம்பெறுமென்று அறிவித்த ஜனாதிபதி ரணில், அதுவா இதுவா முதலில் நடைபெறுமென்று இழுபறிப்படும் கேள்விக்கு விடை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பின்னர் - சிலவேளை அடுத்த சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமென்று ரணிலின் குடும்பப் பத்திரிகையான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் தேர்தலில் வென்றால் இது நடைபெறும். இவர் தேர்தலில் தோற்றாலும் புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி தமது பலத்தை நிரூபிக்க விரும்புவார். எனவே ரணில் வென்றாலென்ன தோற்றாலென்ன ஜனாதிபதி தேர்தலின் பின்னரான சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயம் இடம்பெறும்.
தமது ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்கு ரணில் வடக்கில் பிள்ளையார் சுழி போட்டிருப்பதையும் இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும். தென்னிலங்கையின் சகல அரசியல் கட்சிகளுக்குள்ளும் புகுந்து விளையாடி பிளவுகளை ஏற்படுத்தி வரும் இவர், அதுபோதாதென்று தமிழர் தரப்பிலும் இதனை ஆரம்பித்துள்ளார்போலத் தெரிகிறது.
வடக்குக்கு மூன்று நாள் தேர்தல் சுற்றுலா ஆரம்பித்த ரணில் முதல்நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடக் கட்டிடம் ஒன்றைத் திறந்து வைத்தார். உறுமய திட்டத்தின் கீழ் இலவச காணிப்பத்திரங்களை பலருக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தார். யாழ்ப்பாண குடாநாட்டின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் இவரது நிகழ்வில் பங்குபற்றினர். ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இவர்கள். சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் இராமநாதனைக் காணவில்லை.
மருத்துவபீட நிகழ்வில் ரணில் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். முன்னர் ஒரு தடவை இப்பத்தியில் குறிப்பிட்டது போன்று இந்த உரையை ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் என்று கூறலாம். வடக்கு கிழக்கு பிரச்சனைகளுக்கு விரைவில் உறுதியான தீர்வு என்ற பாணியில் இவரது உரை அமைந்திருந்தது.
யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை இவரது உரைக்கு, "தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நேரம் இதுவே" - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு என்று தலைப்பிட்டிருந்தது. அதாவது, தம்மை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால் தம்மால் தமிழர் பிச்சனைகளைத் தீர்க்க முடியுமென ரணில் கூறியிருப்பதாக இது அர்த்தப்படுகிறது.
இந்த உரையில், தமிழர்களின் காணிப் பிரச்சனைகள், தடுப்புக்காவல் கைதிகள் விடுதலைப் பிரச்சனை, இழப்பீடுகள் வழங்கல், உண்மை மற்றும் நம்பிக்கை முயற்சி, காணாமற் போனோர் விவகாரம், முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் என்று எல்லாவற்றையும் சுட்டிக்காட்டிய இவர், தாம் மேற்கொண்ட திட்டங்கள் நிறைவேறினால் வடக்கு புரட்சிகரமாக மாறுமென்று தெரிவித்துள்ளார். இந்திய உதவியுடன் திருமலையை அபிவிருத்தி செய்வதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
தமிழர்களின் பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவில்லையென்று அவர் கூறும்போது தமது நல்லாட்சிக் காலத்திலும் அது நடைபெறவில்லையென்பதை அவர் தெரிந்து வைத்திருப்பாரென நம்ப இடமுண்டு. தேர்தல் காலத்தில் நம்ப முடியாத வாக்குறுதிகளை வேட்பாளர்கள் அள்ளி வீசுவதும் பின்னர் மறந்துவிடுவதும் அரசியலில் சர்வசாதாரணம்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க ஆகியோரைவிட பல காரணங்களால் ரணில் முக்கியமானவர். 1977ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக அரசியலில் இருப்பவர். ஆறு தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர். சுமார் இருபதுக்கும் அதிகமான அமைச்சர் பதவிகளில் இருந்தவர். விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியவர். இறுதியாக ஜனாதிபதிப் பதவியையும் வகித்து வருபவர். இத்தனை வருடங்களில் தமிழரின் ஏதாவதொரு பிரச்சனையை இவர் தீர்த்திருப்பாரென்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நல்லாட்சிக் காலம் என்பது இவரது அரசியல் வாழ்வில் முக்கியமான காலகட்டம். மைத்திரி ஜனாதிபதியாகவும், இவர் பிரதமராகவும் இருந்தனர் என்பதைவிட, தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் நல்லாட்சியின் பங்காளியாக அனைத்து விடயங்களிலும் ரணிலுடன் சேர்ந்து இயங்கியது என்பது பகிரங்கமானது.
இனப்பிரச்சனைக்கென புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாகக் கூறி சுமார் நூறு வரையான கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கான சில வரைபுகளும் தயாரிக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பு இதோ வருகிறது என்று கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் பல நூறு தடவை தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டி வந்தார்.
"இவர்தான் எங்கள் சட்டமா அதிபர்" என்று சுமந்திரனை விரல் சுட்டி பொதுநிகழ்வுகளில் ரணில் அடையாளம் காட்டியதை மறக்கமுடியாது. சுமந்திரன் ஒரு தடவை கனடாவுக்குச் சென்றபோது அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் புதிய அரசியலமைப்புப் பற்றி தெரிவித்த கருத்து நிரந்தரப் பதிவுக்குரியது.
தம்மை தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞர் என்று தெரிவித்த இவர், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியதும் தாம் அரசியலிலிருந்து விலகிச் சென்றுவிடுவேனென்று கூறினார். அப்போது செவ்வி கண்டவர் நுணுக்கமாக ஒரு கேள்வி கேட்டார். 'புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாவிட்டால் என்ன செய்வீர்கள்" என அக்கேள்வி அமைந்தது.
எனது பணி முடிந்துவிட்டது எனக்கூறி அரசியலிலிருந்து விலகி வழக்கறிஞர் தொழிலுக்கு சென்றுவிடுவேனென்று சுமந்திரன் நிதானமாக பதில் சொன்னார். ஆக, இரண்டில் எதுவானாலும் அரசியலிலிருந்து விலகி விடுவேன் என்பதாகவே சுமந்திரனின் பதில் இருந்தது.
நல்லாட்சிக் காலத்தில் ரணிலுடன் கூட்டமைப்பு தேநிலவு கொண்டாடிய வேளையில் இந்தச் செவ்வி இடம்பெற்றது. நல்லாட்சி நாலரை ஆண்டுகளில் முடிந்தது. தேநிலவும் கசந்தது. ரணில் எதனையும் வழங்கவில்லை. புதிய அரசியலமைப்பு என்பது கானல் நீரானது. ஆனால் சுமந்திரன் இன்னமும் எம்.பி.யாகவே இருக்கிறார்.
கோதபாய ஆட்சிக்காலத்தில் சுமந்திரன் மீண்டும் கனடா சென்று அவரது ஆதரவாளர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றதும், பார்வையாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால் கூட்டம் குழப்பமடைந்ததும், கனடிய பொலிஸாரின் பாதுகாப்புடன் மண்டபத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதும்....... இது இன்னொரு கதை.
இந்தத் தொடரின் மற்றொரு அத்தியாயம் கடந்த வார ரணிலின் யாழ்ப்பாண நிகழ்வில் இடம்பெற்றது. அண்மைய காலங்களில் ரணிலுக்கு எதிராகவும், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தொனியிலும் தமது கருத்துகளை வெளியிட்டு வந்த சுமந்திரன் ரணிலின் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில், ஜனாதிபதி பங்குபற்றும் நிகழ்வில் கட்சி பேதத்துக்கு அப்பாற்பட்டதாக இவர் பங்கேற்றதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால் இங்கு உரையாற்றுகையில் இவர் முன்னெடுத்த விடயம்தான் பலரையும் சினக்க வைத்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டம் நீண்டகாலமாக அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கவில்லையென்று ரணில் தமது உரையில் குறிப்பிட்டதை, தமது உரைக்கான கருவாக எடுத்துக் கொண்ட சுமந்திரன், 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்ததை தவறான முடிவு எனும் வகையில் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூருவார்கள் என்று கூறி ரணிலின் கடைக்கண் பார்வையை தம்பக்கம் இழுக்க எடுத்த முயற்சி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
2005ம் ஆண்டுத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்ததால்தான் ரணில் தோல்வியடைந்தார் என்பது நிதர்சனம். இது அன்றைய சூழலில் தேவையான ஒன்றாக இருந்தது. ஆனால் இதனை ரணிலை தமிழ் மக்கள் தோற்கடித்தனர் என்ற அர்த்தத்தில் கூறி ரணிலிடம் சபா~ஷ் பெற வேண்டிய தேவையில்லை.
அந்தத் தேர்தலில் தாம் வெற்றி பெறாத ஆதங்கம் ரணிலுக்கு இருக்கலாம். ஆனால் அவர் நாலரையாண்டு நல்லாட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து அவர்களையும் ஏமாற்றி தமிழ் மக்களை எவ்வாறு எத்திப் பிழைக்கும் அரசியல் செய்தாரென்பது எல்லோருக்கும் தெரியும். வேண்டுமானால் சுமந்திரன் இதை தமது உரையில் சுட்டியிருக்கலாம்.
தொடர்ச்சியாக வந்த சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட காரணத்தாலேயே தமிழர்கள் 2005 தேர்தலை புறக்கணித்ததையும், வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்த விரும்புவதையும் ரணில் நன்கறிவார். இதனை அறியாதவர்போல் சுமந்திரன் தமிழ் மக்கள் தவறு செய்ததுபோல பொதுவெளியில் ரணில் முன்னிலையில் பகி~;கரிப்பை சுட்டியிருக்க வேண்டியதில்லை.
பொதுவேட்பாளரை எதிர்க்கும் கருத்துடைய சுமந்திரனும் சம்பந்தனும் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பது தெரியவர தொடங்கியிருக்கிறது.