முள்ளிவாய்க்காலில் இன்று தமிழினப் படுகொலை நினைவேந்தல்!
|
2009 ஆம் ஆண்டு பாரிய இனப்படுகொலையுடன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. |
|
கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் ஊர்திப் பயணம், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல், உள்ளூராட்சி சபைகளில் அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில மூன்று தசாப்த காலப் போரில் உயிர்நீத்த உறவுகள் நினைவுகூரப்பட்டனர். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் போரில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டு பொதுச்சுடர் ஏற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வெவ்வேறு பாகங்களிலும் அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, கொழும்பில் வெள்ளவத்தை அலெக்ஸ்சான்ரா வீதியின் முடிவிற்கு எதிர்ப்புறத்தில் உள்ள கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை மாலை 5மணிக்கு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் லண்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும், தமிழகத்திலும் நாளைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தவுள்ளன. |