கலந்துரையாடல்!
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள REVIVE - Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக உலக வங்கிப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று தெநரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய உலக வங்கிப் பிரதிநிதிகள் குழுவினர் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தினர்.
இந்த முதற்கட்டத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் இறங்குதுறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இரு இடங்களையும் மையப்படுத்திய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே உலக வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரு இடங்களையும் உலக வங்கிப் பிரதிநிதிகள் குழு, துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இன்றைய கலந்துரையாடலின்போது, இந்த அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளன, இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதான உட்கட்டமைப்பு வசதிகள் எவை, எதிர்பார்க்கப்படும் திட்ட மாதிரி வடிவங்கள் மற்றும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வடக்கு மாகாணத்துக்குக் கிடைக்கப்பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பொருளாதார நன்மைகள் குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த முக்கிய கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கலந்துகொண்டார்.