பிரேசிலின் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

01.07.2025 08:01:29

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் கடுமையாக சேதமடைந்த தேசிய அருங்காட்சியகக் கட்டடம், சீரமைப்பு பணிகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

 

இந்த அருங்காட்சியகம், பிரேசிலின் மிகப் பழமையான அறிவியல் மற்றும் பண்பாடு சார்ந்த பல விடயங்களை உலகிற்கு பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

தீவிபத்தில் சுமார் 20 மில்லியன் வரலாற்று மற்றும் பழமையான பொருட்கள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, 517 மில்லியன் பிரேசிலியன் ரியால்கள் (சுமார் 95 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

2025 ஜூன் 30ஆம் திகதி, பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அருங்காட்சியகத்தின் சில பகுதிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. முழுமையான திறப்பு 2028-ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட முக்கியமான பொருட்களில், 5.6 தொன் எடையுள்ள ‘பென்டெகோ’ எனப்படும் விண்கல் மற்றும் ‘லுசியா’ என அழைக்கப்படும் பழமையான மனித உடற்கூறு பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

1818-ல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், அந்தியமைந்த வெளிர் மஞ்சள் நிற முகப்பைத் தவிர மற்றவை தீயில் சிதைந்தன. அதில் எகிப்திய கலைப்பொருள்கள், பிரேசிலில் கண்டெடுக்கப்பட்ட பழமையான மனித புதைபடிமங்கள் உள்ளிட்ட அரிய சேகரிப்புகள் தீயில் கருகின.

 

தற்போது, தீவிபத்தில் இருந்து தப்பிய பென்டெகோ விண்கல், திமிங்கல எலும்புக்கூடு போன்ற புதிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இடமாக மட்டுமல்லாமல், பிரேசிலின் கலாசார அடையாளமாகவும், அறிவியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமாகவும் இந்த அருங்காட்சியகம் மீண்டும் உருவெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.