பறிபோன தாய் நிலம் - கீரிமலை சிவன் கோவிலை இடித்து அதிபர் மாளிகை..!
பழமைவாய்ந்த கீரீமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளது.
வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் சிலரை கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச் சென்று ஆலயத்தின் தற்போதைய நிலையை காண்பித்துள்ளனர்.
இவ்வாறு கீரிமலை கிருஸ்ணன் ஆலய நிர்வாகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடவையாக சென்று ஆலயத்தை பார்வையிட்டனர்.
இவ்வாறு ஆலயத்தை சென்று பார்வையிட்ட ஆலய பரிபாலன சபையினருடன் கிராம சேவகரும் பயணித்துள்ளார்.
ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிப்பு
இதன் போது, ஆலயத்தின் வசந்த மண்டபம் இல்லை, முழுமையாக இடித்து தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதிகள் உள்ளன. அதேபோல் ஆலய விக்கிரகங்களில் பிள்ளையார், முருகன் என்பனவற்றை காணவில்லை. எஞ்சியவை உள்ளது. இதேநேரம் அருகில் இருந்த மிகப் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் முழுமையாக காணவில்லை. அந்த இடம் வரைஅதிபர் மாளிகை அமைந்துள்ளது. கதிரை ஆண்டவர் ஆலயம் அதன் அருகே இருந்தது. அதனை பார்க்க முடியவில்லை.
மேலும், கீரிமலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட செய்தி சைவ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
கீரிமலையில் போர்த்துக்கீசர் காலத்தில் இருந்தே அமையப்பெற்ற ஆதிச்சிவன் ஆலயமானது அதன் அருகே பாதாளகங்கை எனப்படும் நன்நீர் கிணற்றுடன் கூடிய சிவன் ஆலயம். இதன் அருகே சித்தர்களின் தியான மடமும் இருந்தன.
அதிலே நல்லூர் தேரடிச் சித்தர் என எல்லோராலும் அறியப்பட்ட சடையம்மாவின் சமாதியுடன் சடையம்மா மடம் என்பனவும் இருந்தன.
இதேபோன்று அப்பகுதியிலே நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு முதல்வரான மணி ஐயரின் குருவின் சமாதி என்பன அங்கே மிக நீண்டகாலமாக இருந்தது.
அதேபோன்ற பழமையான கதிரை ஆண்டவர் ஆலயமும் இருந்தது. இவ்வாறான ஆன்மீக அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கப்பட்டுத்தான் ஒரு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியும்போது சைவ சமயந்தவர்களின் நெஞ்சம் தாங்க மறுக்கின்றது.
இவை தொடர்பில் மிக நீண்டகாலமாகவே நாம் கோரிக்கை விடுத்தபோதும் தற்போதுதான் உண்மை வெளிவந்துள்ளது. இவற்றை அழித்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவற்றை மீள அமைத்தே ஆக வேண்டும். அந்த ஆலயங்கள் வரலாற்று சின்னங்கள் இருந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவற்றினை அழித்தமைக்கும் எமது வன்மையான கண்டனங்களையும் நாம் பதிவு செய்கின்றோம்.- என்றார்.