தேசிய சங்கத்தில் இருந்து விலகினார் திலகராஜ்
தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து தான் ஒதுங்கியுள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் அறிவித்துள்ளார்.
ஹற்றனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எம்.திலகராஜ் மேலும் கூறியுள்ளதாவது, “நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முக்கிய 3 பிரேரணைகளை முன்வைத்திருந்தேன்.
இதில் குறிப்பாக சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதனை இரு பிரேரணைகள் வலியுறுத்தின. அந்த கோரிக்கை தற்போது வெற்றியளித்துள்ளது. இதன்காரணமாகவே கால்நூற்றாண்டு காலமாக பாராமுகம் காட்டிய அரசாங்கம், இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் தலையிட்டுள்ளது.
மேலும் சம்பள விவகாரத்தில் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அவை நடைமுறைக்கு வருவதில் தொடர்ச்சியாக தோல்விகளே ஏற்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே கட்டளையிட்டிருந்தார். அந்த கட்டளைகூட நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு தடையாக கூட்டு ஒப்பந்த முறைமையே இருக்கின்றது.
எனவேதான், தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்ற யோசனையையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்தேன். தென்பகுதி மக்களைப்போல மலையக மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சகல வழிகளிலும் சாத்தியமான தீர்வாக அமையும் என நம்புகின்றேன்.