எரிவாயு கொள்கலனை வாங்கும்போதே கசிவு இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொள்க!

03.12.2021 06:37:20

சந்தையில் சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும்போது, விற்பனைப் பிரதிநிதியை அணுகி, அந்த சந்தர்ப்பத்திலேயே கொள்கலனில் எரிவாயு கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நுகர்வோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் மற்றும் தீப்பரவல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவினால் உடனடி மற்றும் செயன்முறை ரீதியான நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறாக 13 பரிந்துரைகளை நுகர்வோருக்காக முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு பாகங்களில் சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய 131 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை அண்மைய சில நாட்களில் பதிவாகியுள்ளதாக ஜனாதிபதி விசாரணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பலகே தெரிவித்துள்ளார்.

எரிவாயு கொள்கலனுடன் பொருத்தப்படும் ரெகியூலேட்டருக்காக பரிந்துரைக்கப்படும் காலம் ஐந்து வருடங்கள் என்பதுடன், எரிவாயு விநியோக குழாய்க்கு பரிந்துரைக்கப்படும் காலம் இரண்டு வருடங்களாகும்.

சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின், 0115 811 927 அல்லது 0115 811 929 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு பொதுமக்கள் அது குறித்து ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.