அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

14.04.2024 09:24:27

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து எவ்வாறான பதில் நடவடிக்கையை எடுப்பது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பபை இஸ்ரேலிய போர் அமைச்சரவையிடம் இஸ்ரேலிய அமைச்சரவை கையளித்துள்ள அதேவேளை மத்திய கிழக்கில் பாரிய யுத்தமொன்றிற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

நள்ளிரவில் கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை இஸ்ரேலிய பிரதமர் உட்பட மூவர் அடங்கிய போர் அமைச்சரவையிடம் ஒப்படைத்துள்ளது.

மூவரும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ள நிலையில் பிராந்தியத்தின் தலைவிதி அவர்களின் கரங்களில் தற்போது தங்கியுள்ளது.

 

யுத்த அமைச்சரவையின் கூட்டத்திற்கு முன்னரான பதற்றமான நிமிடங்களில் அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலிய பிரதமரும் 25 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த உரையாடலில் இஸ்ரேல் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டு;ம் என பைடன் வலியுறுத்தினார் என இஸ்ரேலிய ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

இந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பைடன் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் என்ன தெரிவித்தார் என்பதை தெரிவிக்கவில்லை  எனினும் ஈரான் செலுத்திய ஏவுகணைகள் ஆளில்லாவிமானங்கள் அனைத்தும் அமெரிக்காவின் உதவியுடன் வீழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த தற்பாதுகாப்பு திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்ற தெளிவான செய்தி எதிரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தாக்குதல் காரணமாக பத்துவயது சிறுவன் ஒருவன் மாத்திரமே காயமடைந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் பாலைவனத்தில் அந்த நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பெடோனியஸ் சமூகத்தை சேர்ந்த சிறுவன் காயமடைந்துள்ளான்.

தென்பகுதி இராணுவதளமொன்றும் சிறிய சேதங்களை சந்தித்துள்ளது.

இந்த தாக்குதலிற்கு முன்பாக ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அதன் ஏவுகணைகளால் இஸ்ரேலை நெருங்க முடியாது அவை பாலைவனத்தில் விழுந்து வெடிக்கலாம் உயிரிழப்பு ஏற்படாது என அமெரிக்க அதிகாரிகள்சரியாக கணித்திருந்தனர்.

அவ்வாறான சூழ்நிலையில் இஸ்ரேல் கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் இறங்ககூடாது என அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என ஊகங்கள் வெளியாகியிருந்தன.

ஈரான் கடுமையான பதிலடியை எதிர்பார்க்கவில்லை என்பது அது வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் புலனாகியுள்ளது-தனது பதில் தாக்குதலை தொடர்ந்து இந்த விடயம் முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுவதாக ஈரான் ஐநாவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேலிய பிரதமர் ஈரானின் அணுஉலைகளை அழிக்க விரும்புவார் என்பது ஈரானிற்கும் அமெரிக்காவுக்கும் நன்கு தெரிந்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் தனது நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தல் என அதனை பல காலமாக கருதிவருகின்றார்.

எனினும் அமெரிக்காவின் உதவியின்றி அவற்றை அழிப்பது மிகவும் கடினம்.

எனினும் இந்த தருணத்தை பயன்படுத்தி அவரும் போர்க்குணம் மிக்க சகாக்களும் ஈரானின் அணுஉலைகளை தாக்க முயலக்கூடும்.

எதிர்விளைவுகள் குறித்து சிந்திக்காமல் ஈரானின் தாக்குதலிற்கு இஸ்ரேல் பதில்நடவடிக்கை எடுக்கலாம் என ஜோ பைடனின் அதிகாரிகள் கரிசனை கொண்டுள்ளனர் என என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.