பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை..!

09.08.2022 09:35:45

இராஜதந்திரம்

அரசாங்கத்தின் பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை காரணமாக இலங்கை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு அனுமதிப்பதற்கு முன்னர் அதிகாரிகள் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்திருக்க வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், பயணத்தை ஒத்திவைக்கக் கோர வேண்டிய அவசியம் அரசாங்கதிற்கு இருந்திருக்காது என்றார்.

தாமதப்படுத்துமாறு கோரிக்கை

இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து, வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் சீன அதிகாரிகளிடம் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கோரியுள்ள நிலையில் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வழமையான செயற்பாடுகளில் தலையிடாமல் இந்த விடயத்திலிருந்து தொந்தரவு செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.