வீரர்களிடம் நிறைய திறமை இருந்தும் சரியாக வெளிபடுத்தவில்லை - கொல்கத்தா கேப்டன் மார்கன் வேதனை
பிரித்விஷாவிடம் உங்களது இயல்பான ஆட்டத்தை விளையாடுமாறு கூறினேன் என்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
14-வது ஐ.பி.எல். போட்டியில் அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. ஆந்த்ரே ரசல் 45 ரன்னும், சுப்மன்கில் 43 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் நல்ல அடித்தளம் அமைத்தனர். குறிப்பாக பிரித்விஷா அதிரடியாக விளையாடினார்.
ஷிவம் மாவி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் பிரித்விஷா 6 பவுண்டரி அடித்து அசத்தினார். அவர் 41 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். டெல்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து வென்றது.
ஷிகர் தவான் 46 ரன் எடுத்தார். டெல்லி பெற்ற 5-வது வெற்றி (7 ஆட்டம்) இதுவாகும். கொல்கத்தா 5 தோல்வியை (7 ஆட்டம்) சந்தித்தது.
தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் மார்கன் கூறியதாவது:-
தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் மெதுவாக ஆடினோம். ஒரு ஓவரில் விக்கெட்டுகளை இழந்தோம். இறுதி கட்டத்தில் ஆந்த்ரே ரசல் 150 ரன்னுக்கு கொண்டு சென்றார்.
ஆனால் நாங்கள் மீண்டும் பந்து வீச்சில் மெதுவாகவே செயல்பட்டு விட்டோம்.
இந்த போட்டித் தொடரில் இதுவரை ஒரு ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படுவதில் சிரமப்பட்டு வந்துள்ளோம்.
முன்னோக்கி நகரும் போது, அணியில் பெரிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவது எங்களது தேவை. நீங்கள் நேர்மையாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.
எங்களிடம் பெரிய அளவில் திறமைகள் உள்ளன. ஆனால் திறமைகள் மட்டும் உங்களை அழைத்து செல்லாது. நீங்கள் திறமைகளை செயல்திறனாக மாற்ற வேண்டும். நாங்கள் அதை செய்யவில்லை. அதிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
வெற்றி குறித்து ரிஷப் பண்ட் கூறியதாவது:-
பிரித்விஷாவிடம் உங்களது இயல்பான ஆட்டத்தை விளையாடுமாறு கூறினேன். இந்த ஆட்டத்தில் ரன்-ரேட்டை உயர்த்த முயற்சித்தோம். இதுபோன்ற ஆட்டங்களில்தான் நிகர ரன்-ரேட்டை பற்றி சிந்திக்க முடியும்.
எல்லோரிடமும் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுமாறும், அவர்களால் முடிந்ததை செய்யுமாறும் கூறினோம்.
கடந்த ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றோம். ஆனாலும் எங்கள் செயல்முறையை மாற்ற வேண்டாம் என்று நினைத்தோம். செயல் முறையை நீங்கள் நம்பினால், நீங்கள் முடிவை (வெற்றி) பெறுவீர்கள் என்றார்.