“மாணவர்களுக்குக் கட்டணமின்றி மனநல ஆலோசனைகள்”
|
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. 180 கேள்விகளைக் கொண்டுள்ள இந்த தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. |
|
அந்த வகையில் 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் 3ஆம் தேதி (03.05.2026) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தமிழ்நாடு அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தின் கீழ் மனநல ஆலோசனை பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வருகின்ற 03.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 'டெலி கவுன்சிலிங்' (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |