சனத் ஜெயசூரிய சவூதி அரேபியாவிடம் கோரிக்கை!

11.10.2026 11:35:16

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரிய சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஜெயசூரிய, மதம் அல்லது இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இலங்கை மக்கள் அனைவரும் இந்த மனிதநேயக் கோரிக்கைக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்கள் என்ற ரீதியில், நமது மதம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம்.

நமது சக இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் கருணை வழங்குமாறு சவூதி அரேபிய இராச்சியத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதிவில் சவூதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் மற்றும் சவூதி வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் கணக்குகளையும் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சனத் ஜெயசூரியவின் இந்த வேண்டுகோள், அனோஜனுக்கான கருணை மனுக்களுக்கு நாட்டின் விளையாட்டுத் துறையிலிருந்தும் வலுவான ஆதரவைச் சேர்த்துள்ளது.

கல்முனையைச் சேர்ந்த இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்தத் தண்டனையை எதிர்த்து சவூதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய இலங்கை சட்டத்தரணிகள் குழுவினர் சவூதி வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அதேவேளை, அவருக்குக் மன்னிப்பு பெற்றுத் தருவதற்காக இலங்கை அரசாங்கமும் தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.