
புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது?
சமீபத்தில் தமிழகத்தின் கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு புவிசார் குறியீடு வழங்கப்படுவதன் நோக்கம் என்ன? அதனால் என்ன பயன்? எனத் தெரிந்துக் கொள்வோம்.
புவிசார் குறியீடு என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட பொருள், அது உணவோ, கலைப்பொருளோ, பயன்பாட்டு பொருட்களோ, எதுவாகயிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு அது உலகளவில் கவனம் பெற்றதாக இருக்கும் நிலையில் அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. உலகளவில் அப்படி புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஷாம்பெய்ன் (ப்ரான்ஸ்), டார்ஜிலிங் டீ (டார்ஜிலிங்) உள்ளிட்ட பல பொருட்கள் பிரபலமானவை.
புவிசார் குறியீடு வழங்குவதன் நோக்கம் மற்றும் பயன்:
இவ்வாறு புவிசார் குறியீடு வழங்கப்படுவதன் நோக்கம், அந்த பொருளின் போலிகள் உருவாகாமல் தடுக்கவும், தொடர்ந்து குறிப்பிட்ட அந்த நிலப்பகுதியின் தயாரிப்புத் திறனை உலகளவில் ஊக்கப்படுத்தவுமாகும். உதாரணத்திற்கு திண்டுக்கல் பூட்டு புவிசார் குறியீடு பெற்ற தனித்துவமான ஒரு பொருள். ஆனால் திண்டுக்கல் தாண்டியும் பல பகுதிகளில் பூட்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை ‘திண்டுக்கல்’ பூட்டு என சொல்லி ஏமாற்றி விற்பதை இது தடுக்கிறது. இதனால் குறிப்பிட்ட அந்தந்த ஊரின் உண்மையான தயாரிப்பு பொருட்கள் உலகளவில் வணிகம் செய்ய வாய்ப்பு கிடைப்பதுடன், போலிகளும் தடுக்கப்படுகின்றன. மேலும் இது ஒரு குறிப்பிட்ட நிலத்தின் கலை, பண்பாட்டை அந்த பொருட்கள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைகிறது
அவ்வாறாக தமிழ்நாட்டில் இதுவரை 41 பொருட்கள் இந்த புவிசார் குறியீட்டை பெற்றுள்ளன. அதில் அதிக புவிசார் குறியீடு பெற்ற மாவட்டமாக தஞ்சாவூர் உள்ளது.
தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்:
- கும்பகோணம் வெற்றிலை
- தோவாளை மாணிக்க மாலை
- மலபார் மிளகு
- தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு
- ராமநாதபுரம் குண்டு மிளகாய்
- வேலூர் கத்தரிக்காய்
- நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்
- கன்னியாக்குமரி கிராம்பு
- கள்ளக்குறிச்சி மரச்சிற்பம்
- கருப்பூர் கலம்காரி ஓவியங்கள்
- அரும்பாவூர் மர வேலைபாடுகள்
- கோவில்பட்டி கடலை மிட்டாய்
- கண்டாங்கி சேலை
- திண்டுக்கல் பூட்டு
- பூம்பாறை மலைப் பூண்டு
- திருபுவனம் பட்டு
- தோடா எம்ப்ராய்டரி
- பழனி பஞ்சாமிர்தம்
- நாகர்கோவில் நகை
- மகாபலிபுரம் கற்சிற்பம்
- ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
- மதுரை மல்லிகைப்பூ
- ஈரோடு மஞ்சள்
- தஞ்சாவூர் வீணை
- செட்டிநாடு கொட்டான்
- பத்தமடை பாய்
- சிறுமலை வாழைப்பழம்
- விருப்பாச்சி வாழை
- கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை
- சேலம் வெண்பட்டு
- கோவை கோரா காட்டன்ஸ்
- ஆரணி பட்டு சேலை
- நாச்சியார்கோவில் விளக்கு
- சுவாமிமலை வெண்கல சிலை
- தஞ்சாவூர் ஓவியம்
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
- கோவை ஈரமாவு அரவை பொறி
- மதுரை சுங்கிடி சேலை
- பவானி ஜமக்காளம்
- காஞ்சி பட்டு
- சேலம் சுங்கடி சேலை