ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா

25.11.2021 11:35:34

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்து உள்ளதுடன், பரவல் அதிகமுள்ள பகுதியாக மாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.


கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான, உலகளாவிய மதிப்பீடு நேற்று முன்தினம் வெளியானது. இதில் சர்வதேச அளவில் கொரோனா பரவல் மற்றும் இறப்புகள் 6 சதவீதம் அதிரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.


கடந்த வாரம் 36 லட்சம் பேரிடம் தொற்று உறுதியானதுடன் ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியதாவது: உலக அளவில் கொரோனா பரவல் மற்றும் இறப்புகள் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.


ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் வைரஸ் பரவல் 11 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதியில் இருந்து பாதிப்பு அதிகரிக்கும் ஒரே பகுதியாக ஐரோப்பிய நாடுகள் உள்ளன. எனவே அவசர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளா விடில், எதிர்வரும் மூன்று மாதங்களில் ஏழு லட்சம் பேர் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம்.


ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த வேண்டும். முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக்கினால் மட்டுமே அடுத்த ஊரடங்கை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.