அனைத்து மதத்தவரும் சுதந்திரமாக வழிபட வழி செய்வதாக உறுதி

24.06.2024 08:17:00

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

 

நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சிவபூமி அறக்கட்டளை அமைப்பாளர் கலாநிதி ஆறு. திருமுருகன், ரிஷிதொண்டுநாத சுவாமிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலையில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு வகை செய்தல், காங்கேசன்துறையில் உள்ள ஆச்சிரமத்தின் காணி விடுவிப்பு, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திலுள்ள பெட்டிக்கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்து சமய தலைவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க; குருந்தூர்மலை, வெடுக்குநாறி என்பன தொல்பொருள் திணைக்களக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பினும் அனைத்து மதத்தவரும் பாரபட்சமின்றி சுதந்திரமாக வழிபட வழி செய்வதாக உறுதியளித்தார்.

மேலும் திருகோணமலையில் உள்ள சிறு கடைகளை அகற்றல் மற்றும் காங்கேசன்துறையில் உள்ள சைவாச்சிரமத்தின் காணி விடுவிப்பு தொடர்பிலும் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.