மல்லையாவின் சொத்துகளை முடக்க பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

29.07.2021 08:24:18

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்க பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விஜய் மல்லையா. இவர் ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பில் பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக் ஷன் உள்ளிட்ட 13 வங்கிகளிடம் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, பிணையில் விடுவிக்கப் பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

கடந்த மே மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற விசாரணையில் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்தியாவில் விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு ஈடாக சொத்துகள் வைத்துள்ளதாகக் கூறி நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை கைது செய்தது. அவர் மீதான விசாரணை பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிரான இந்த திவால் உத்தரவால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், மல்லையாவின் சொத்துக்களை முடக்கி கொடுத்த கடன் தொகையை மீட்க, வங்கிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.