“அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்”.

05.03.2026 14:58:54

திருச்சி ரயில் நிலையத்தின் வரவேற்பு வளைவில், இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனை எதிர்த்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் "அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல! ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்" என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும் - அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள்! தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே #OutOfControl-தான்! இந்தி திணிப்பை நிறுத்துக" என தனது பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். என்ன பஞ்சாயத்து? திருச்சி ரயில் நிலையத்தில், 'கர்தவ்ய த்வார்' என்று தமிழிலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்ததுதான் பிரச்சனைக்கு காரணம்.

இதை பார்த்த மக்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் முழித்திருக்கின்றனர். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டிருக்கின்றனர். திமுகவினர் இந்தி வாக்கியங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து அந்த வாக்கியம் அகற்றப்பட்டிருக்கிறது. சமீப நாட்களாக தமிழ்நாட்டின் சில ரயில் நிலையங்களில், இந்தி மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.