மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும்!

01.08.2026 09:54:25

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும். அதற்காக செப்டம்பர் 15 ஆம் திகதி அமைந்துள்ள உலக ஜனநாயக தினத்துக்கு முன்னர் அரசாங்கம் மாகாணசபை தேர்தலுக்கான திகதியை அறிக்கவேண்டும் என கஃபே அமைப்பு உள்ளிட்ட தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நேற்று வியாழக்கிழமை (30) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தன.

    

அங்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றம் மாகாணசபை, மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நடத்திச் செல்வது மக்களின் உரிமையை மீறும் செயல் என எமது நாட்டின் உயர் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு அடிப்படை உரிமை மீறள் தொடர்பான வழக்கொன்றின் போது தீர்ப்பளித்திருக்கிறது.

அதனால் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகளை முன்னெடுத்துச்செல்வது பாரிய அநியாயமாகும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகளை நல்லமுறையில் முன்னெடுத்துச் செல்வதாக யாராவது தெரிவிப்பதாக இருந்தால், பாராளுமன்ற தேர்தலை நடத்தாது விட்டால் அதிகாரிகளால் முன்னெடுத்துச்செல்ல முடியும்.அதிகாரிகள் நிர்வாகம் செய்வது, மக்கள் பிரதிநிதிகள் நிர்வகிப்பதுபோல் இல்லை.

ஏனெனில் அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் அல்ல. அரசியல் பிரதிநிதிகள் மக்களினால் தெரிவு செய்யப்படுபவர்கள். அதனால் அவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளனர்.

மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக பிராந்தியத்துக்கு அதிகாரம் பரலாக்கப்பட வேண்டும் என்றே அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கம் விரைவாக மாகாணசபை தேர்தலை நடத்தி மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டு்ம். குறிப்பாக செப்டம்பர் 15ஆம் திகதி உலக ஜனநாயக தினமாகும். அந்த தினத்துக்கு முன்னராவதுு அரசாங்கம் மாகாணசபை தேர்தலை அறிவிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிடுகையில்,

அநுரகுமார திசாநாயக தலைமையிலான அரசாங்கத்திடம் மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கேட்கவேண்டிய நிலை ஏற்படும் என நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் இப்போது இடம்பெற்றுவருவது நாங்கள் எதிர்பார்த்த விடயங்கள் அல்ல .

என்றாலும் தற்போதுள்ள அரசாங்கத்துக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது. ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்னும் இரண்டு வருடங்கள் ஆகவில்லை.

அதனால் அரசாங்கம் தனது கொள்கை பிரகடத்தின் 128ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள, திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை நடத்தி மக்களுக்கு அதனை ஒப்படைப்போம் என்ற வாக்குறுதியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது இவர்களுக்கு, அவர்களின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த விடயம் மறந்துள்ளது.

வடக்கு மாகாணசபையை எடுத்துக்கொண்டால் அந்த மாகாண மக்களுக்கு 11 வருடகளுக்கு அதிக காலம் வாக்களிக்கும் உரிமையை இல்லாமல் செய்திருக்கிறது. இதன் மூலம் நாங்கள் அரசியலமைப்பை மதிக்காத ராஜ்ஜியமாக மாறியுள்ளோம். இது ஒழுக்கமுள்ள விடயமல்ல.

இலங்கையை உலக வரைபடத்தில் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் அரசியலமைப்பு மதிக்க வேண்டும். இலங்கை தேர்தல் வாக்களிப்பு நடத்துவதில்லை என தெரிவிப்பது, அரசியலமைப்பை மதிக்காத நிலைக்கு தள்ளப்படுகிறோம். அநுரகுமார திிசாநாயக்க ஜனாதிபதி அவ்வாறு செயற்படுவார் என யாரும் நம்பவில்லை என்றார்.

கஃபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் குறிப்பிடுகையில்,

2019ஆம் ஆண்டுடன் நாட்டின் அனைத்து மாகாணசபைகளதும் ஆட்சிக்காலம் முடிவடைந்து, மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் மாகாணசபைகள் செயற்பட்டு வருகின்றன.2017முதல் 4 ஜனாதிபதிகள் பதவி வகித்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வந்ததுடன் 9 மாகாண ஆளுநர்களையும் பதவி விலகச்செய்து, புதிய மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தாமல் பிற்போடப்படுவதற்கு இவர்கள் அனைவரும் காரணமாகும்.

அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்துக்குள் மாகாணசபை தேர்தலை நடத்துவதாக தெரிவித்திருந்தார்கள். 20 மாதங்கள் கடந்தும் அது தொடர்பில் முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசாங்கம் தொடர்ந்தும் இந்த மாகாண சபை தேர்தலை பிற்படுத்தாமல், ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கம் என்றவகையில் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.