குட்டிமணி காலம் தொட்டு இன்று வரை தொடர்கதையாகும் படுகொலைகள்!

09.07.2026 08:09:25

சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் படுகொலை செய்யப்படும் கொடூரச் சம்பவங்கள், வரலாற்று ரீதியாக வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி படுகொலை செய்யப்பட்ட காலம் தொட்டே இன்று வரை தொடர் கதையாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

   

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சில் புதன்கிழமை (08) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறைகைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

சிறைக்குள் கைதிகள் படுகொலை செய்யப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசாங்கத்தினால் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்படுவதும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுவதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. ஆனால், இவ்வாறான கொடூரச் சம்பவங்களுக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. குட்டிமணி படுகொலை செய்யப்பட்ட காலம் முதல் இன்று வரை இதே நிலைமையே தொடர்கிறது. சமூக மாற்றத்தை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த தற்போதைய புதிய அரசாங்கத்தின் கீழும் இவ்வாறான படுகொலைகள் தொடர்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் பின்னர், சிறைக்குள் மீண்டும் ஒரு பதற்றமான மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையே நிலவி வருகின்றது.

விசேடமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகள் தற்போது எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள், அவர்கள் தொடர்பான விபரங்கள் என்ன என்பது குறித்து நாம் அதிகாரிகளிடம் கோரியிருந்தோம். ஆனால், இன்றைய கலந்துரையாடலின் போது அந்த கைதிகள் தொடர்பான சரியான விபரங்கள் அதிகாரிகளிடம் இல்லை என்பதும், கைதிகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் விபரக் கோப்புகள் யாவும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுவதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விபரங்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கம் இந்த விபரங்களை வெளிப்படையாக அறிவிக்காத காரணத்தினாலேயே நாடு முழுவதும் ஒரு தேவையற்ற பயமும், பதற்றமும் உருவாகியுள்ளது.

மனிதர்களை மேலும் தண்டிப்பது சிறைச்சாலையின் நோக்கமல்ல. நீதிமன்றத்தால் அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட்டு விட்டது, அதற்கு மேல் சிறைக்குள் அவர்களுக்கு இன்னொரு தண்டனை தேவையில்லை. கைதிகளுக்கு எதிராக சமூகத்தில் ஒரு தவறான கருத்தியலை உருவாக்குவது தற்போதைய நோக்கமல்ல, மாறாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே முக்கியமாகும். எனவே, புலனாய்வுக் குழுக்களின் பரிந்துரைகள் வரும் வரை காத்துக்கொண்டிருக்காமல், அதற்கு முன்னரே எடுக்கக்கூடிய அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுத்து, கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.