வெனிசுலா தேர்தல்: ஆளுங்கட்சியினர் அபார வெற்றி

23.11.2021 09:01:49

வெனிசுலாவில் நடந்த தேர்தலில்களில் ஆளும் சோசலிஸ்ட் கட்சி 20 கவர்னர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. இதனால் அதிபரின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வெனிசுலா பிராந்திய தேர்தல்களில் நாட்டின் தேசிய தேர்தல் கவுன்சில், ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கு 20 கவர்னர் பதவிகளிலும், எதிர்க்கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலேயே இடதுசாரி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 41.8 சதவீதம் பேர் ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்க வந்துள்ளனர். இது சுமார் 8.1 மில்லியன் மக்களுக்கு சமமானதாகவும் என தென் அமெரிக்க நாட்டின் உயர்மட்ட தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபர் நிக்கோலஸ் மதுரோ தனது ட்விட்டர் பக்கத்தில், அழகான வெற்றி, அழகான வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே வெனிசுலாவின் 2வது பெரிய நகரமான மரக்காய்வோ, அதிக மக்கள் தொகை கொண்ட ஹூலியா உள்பட 3 மாநிலங்களை எதிர்க்கட்சி வென்றது. தேர்தல் வெற்றி அறிவிப்புக்கு முன் எதிர்க்கட்சி தலைவர் ஹென்றி கேப்ரிலஸ் வாக்குசாவடிகளை தாமதமாக மூடியது மோசடிக்கு வழிவகுத்தது என்று தெரிவித்தார். கடந்த 2017ல் நடந்த பிராந்திய தேர்தல்களில் ஆளும் கட்சி 19 கவர்னர் பதவிகளை வென்றது. எதிர்க்கட்சி 4 பதவிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.