அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாது!
|
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் தங்கியுள்ள ஈரானிய கப்பல்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் நீரை வழங்குவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா எடுக்கும் முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதநேய சட்டத்தின் கீழ் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. |
|
இது தொடர்பாக சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜீ, வீரசிங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு, இலங்கை கடல் எல்லைக்கு அருகில் தங்கியுள்ள சுமார் 20 ஈரானிய கப்பல்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் நீரை வழங்குவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா எடுக்கும் முயற்சியை இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் இந்த குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ளுமாறும், சர்வதேச மனிதநேய சட்டத்தின் கீழ் தனது பொறுப்பை நிறைவேற்றுமாறும் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். இந்தக் கப்பல்களுக்கு விநியோகங்களை வழங்கினால் இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சுறுத்தியதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கையின் சிறப்பு பொருளாதார வலயத்திற்குள், கடற்கரையிலிருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் தங்கியுள்ள இந்தக் கப்பல்கள் ஏற்கனவே தங்களது சரக்குகளை இறக்கி முடித்துள்ளன. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கும் சட்டவிரோத போர் காரணமாக இந்த கப்பல்களுக்கு மீண்டும் ஈரானுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அக்டோபர் 4 ஆம் திகதி தெரிவிக்கையில், சர்வதேச கடல்சார் சட்டத்திற்கு எப்போதும் கட்டுப்பட்டுச் செயல்படும் இலங்கை அரசாங்கத்திற்கு, வாெஷிங்டன் அழுத்தம் கொடுத்ததாக வெளியாகும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை எனக் கூறினார். இருப்பினும், அமெரிக்கத் தடைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். "சட்டவிரோத ஈரானிய வருமான" வழிகளை முடக்குவதற்காகத் தனது தோழமை நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் முன்னர் தெரிவித்திருந்தார். தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கப்பல்களுக்கு எரிபொருள், உணவு அல்லது பிற விநியோகங்களை வழங்குவதன் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சிவில் அல்லது குற்றவியல் தண்டனைகள் உட்பட அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இலங்கை கடலோரப் பகுதிக்கு அப்பால் தங்கியுள்ள ஈரானுடன் தொடர்புடைய கப்பல்கள் போன்ற, அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் அல்லது உணவை வழங்குவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள், சர்வதேச சட்டம், இறையாண்மைச் சமத்துவம் மற்றும் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்கும் கொள்கை ஆகியவற்றை மீறுகின்றன. இவ்வாறானதொரு செயலமர்வுக்கு அரசாங்க அதிகாரிகள் பங்கேற்றதுகூட சர்ச்சைக்குரியதாகும். உண்மையில், அமெரிக்காவின் நடவடிக்கைகளே சட்டவிரோதமானவை. அதுமட்டுமன்றி, எவ்வித யுத்த விருப்பத்தையும் வெளிப்படுத்தாத ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்தின்படி சட்டவிரோதமானவையாகும். உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கைகளின்படி, அமெரிக்க அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இலங்கையின் தேசிய பாதுகாப்புத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்புடைய சர்வதேச சட்டங்கள் மற்றும் கடப்பாடுகளின் கீழ் இந்தக் கப்பல் பணியாளர்களுக்கு உதவ இலங்கை கடமைப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வோஷிங்டனுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி நிர்வாகத்தின் இந்த கோலைத்தனமான நடத்தை மூலம், தங்களைப் போலி முற்போக்கு அல்லது தேசப்பற்றுள்ள சக்தி எனக் காட்டிக்கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சி முற்றிலும் முறிவடைந்துள்ளது. இதன் பிரதான பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொறுப்பற்ற, போர் வெறி பிடித்த மற்றும் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை இயந்திரத்தின் பொம்மையாக அவர்கள் மாறியுள்ளனர் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. அரசாங்கம் அமெரிக்காவுடன் போர் தொடர்பான ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதா என்றும், இதன் மூலம் இலங்கையின் 70 ஆண்டு கால அணிசேரா வெளியுறவுக் கொள்கை வரலாற்றைக் கைவிட்டுள்ளதா என்றும் இங்கு கேள்வி எழுகிறது. எனவே, இலங்கை தனது மனிதநேயக் கடமையை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் இந்தச் சட்டவிரோத முயற்சிகளை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. சர்வதேச மனிதநேய சட்டத்திற்கு அமைவாகச் செயல்படுமாறும், தகுந்த உத்திகளை வகுத்துத் தங்கியுள்ள பணியாளர்களுக்கு உணவு மற்றும் நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறும் இலங்கை அரசிடம் கம்யூனிஸ்ட் கட்சி மேலும் கோரிக்கை விடுக்கிறது. அத்துடன், அமெரிக்காவுடன் எதேனும் ரகசிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதை வெளிப்படுத்துமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். |